• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரிசிக்கு 5% ஜிஎஸ்டியா ! – நாளை கடையடைப்பு

ByA.Tamilselvan

Jul 15, 2022

அரிசி, தானியங்களுக்கு 5 % ஜிஎஸ்டி விதிப்பை கண்டித்து அரிசி ஆலைகள், அரிசி மொத்த, சில்லறை விற்பனையாளா்கள் போராட்டம் அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் நெல் அரிசி வணிகா் சங்கங்களின் சம்மேளன மாநில தலைவா் டி.துளசிலிங்கம் கூறியது, பஞ்சாப் மாநிலம், சண்டீகா் நகரில் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பதிவு செய்யப்பட்ட பிராண்டுக்கு மட்டுமே 5% வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பண்டல் செய்யப்பட்ட அனைத்து அரிசிக்கும் 5% ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரிசி விலை கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.4 வரை உயரக் கூடும். ரூ.1,000க்கு விற்கப்படும் 25 கிலோ கொண்ட அரிசி சிப்பம், இனி ரூ.1,050 ஆக உயரும். இந்த விலையேற்றம் அடித்தட்டு மக்களை பெருமளவில் பாதிக்கும்.மேலும், இதுவரை அரிசிக்கு எவ்வித வரி விதிப்பும் இல்லாததால் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை அரிசி மூட்டைகள் எவ்வித தங்குதடையின்றி லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், ஜிஎஸ்டி விதிக்கப்படும்போது பல தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. எந்த அரசும் மக்கள் உபயோகிக்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு இதுவரை வரி விதிப்பு செய்ததில்லை. எனவே, மக்களைப் பாதிக்கும் இந்த 5% ஜிஎஸ்டி யை மத்திய அரசு உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை அரிசி ஆலைகள், அரிசி மொத்த, சில்லறை விற்பனையாளா்கள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த கடையடைப்புக்கு மற்ற அனைத்து வணிகா் சங்கங்களிடமும் ஆதரவு கோரப்பட்டுள்ளது என்றும் கூறினார்.