

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தபால் நிலைய பணம் 5 கோடியை கையாடல் செய்த தபால் ஊழியர் 9 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் தபால் உதவியாளராக பணியாற்றி வந்தவர் சூலக்கரையைச் சேர்ந்த அமர்நாத் 38. இவர் கணிணி தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி அஞ்சலக பணம் ரூ.5 கோடியை அவரது தனிநபர் வங்கி சேமிப்பு கணக்கிற்கு வரவு வைத்துள்ளார். இதையறிந்த தபால் நிலைய அதிகாரிகள் விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் அமர்நாத் மீது கடந்த 18.05 2024ம் தேதி தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது, அதிகார வரம்பை மீறி முறைகேடில் ஈடுபட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த அமர்நாத் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொள்ள 5 கோடி ரூபாய் பணத்துடன் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைத்து கடந்த 9 மாதங்களாக தேடப்பட்டு வந்த நிலையில் பந்தல்குடி பைபாஸ் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கியிருந்த அமர்நாத்தை சுற்றி வளைத்து தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

9 மாதங்களுக்குப் பின் கைது செய்யப்பட்ட அவராத்திடமிருந்து கையாடல் செய்யப்பட்ட ரூ.4 கோடியே 58 லட்சத்து 90 ஆயிரம் மீட்கப்பட்டது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.

