உத்தராகண்ட்டில் பனிச்சரிவில் சிக்கிய 47 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 8 பேரை 4 ஹெலிகாப்டர்களின் உதவியுடன் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தாரகண்டில் இந்திய- திபெத் எல்லையை ஒட்டி 3200 மீட்டர் உயரத்தில் மனா கிராமம் உள்ளது. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள இக்கிராமத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மனா மற்றும் பத்ரிநாத் இடையே நேற்று காலை ஏற்பட்ட பனிச்சரிவில் அங்குள்ள பிஆர்ஓ முகாம் புதைந்தது. இந்த முகாமில் 8 கண்டெய்னர்கள் மற்றும் கூடாரத்தில் இருந்து 55 தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கினர். இத்தொழிலாளர்கள் அனைவரும் திபெத் எல்லையை நோக்கிய ராணுவப் போக்குவரத்துக்காக சாலையில் பனியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் ஆவர்.
பனிச்சரிவைத் தொடர்ந்து ராணுவம், இந்திய- திபெத் எல்லை காவல் படை(ஐடிபிபி) மற்றும் பல்வேறு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.65-க்கும் மேற்பட்ட மீட்பு பணியினரின் தீவிர தேடுதலுக்குப் பின் 47 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நேற்று 33 பேர் மீட்கப்பட்ட நிலையில் இன்று 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் எஞ்சியுள்ள 8 பேரை மீட்பதற்காக இரண்டு நாளாக நான்கு ஹெலிகாபக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சமோலி மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.








