நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நான்கு வகையான சிலம்ப உலக சாதனைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்பட்டது. இந்த சாதனைகளை நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளது. தமிழக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென்று சிலம்ப பயிற்சியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்த்தும் நோக்கோடு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து 4 நோபல் உலக சாதனை படைக்கப்பட்டது. முதல் சாதனையாக காலை 7 மணிக்கு 500 மாணவ மாணவிகள் கலந்துகொண்ட சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி 5 மணி நேரம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து 64 மாணவ மாணவிகள் கலந்துகொண்ட 64 வகையான சிலம்ப பயிற்சிகள் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை அடுத்து மாலை ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் கலந்துகொண்ட சிலம்பம் சுற்றியபடி பல்டி அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்டார் தீப்பந்தம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நான்கு நிகழ்ச்சிகளையும் நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனத்தினர் அங்கீகாரம் செய்து சான்றிதழ்களை வழங்கினார். ஒரே நேரத்தில் 500 மாணவ மாணவிகள் பங்கேற்று ஐந்து மணி நேரம் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியும் 64 வகையான சிலம்ப நுணுக்கங்களை 64 சிலம்ப மாணவ மாணவிகள் செய்து காட்டிய நிகழ்ச்சியும், ஒரு மணிநேரத்தில் 467 பல்டிகள் அடித்தபடி சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும், இந்த நிகழ்ச்சிகளுக்கு சிகரம் வைத்தாற்போல் ஸ்டார் தீப்பந்தத்தால், ஒரே நேரத்தில் 100 பேர் தீப்பந்தங்களை சுற்றும் நிகழ்ச்சியும் பார்வையாளர்களை வெகுவாக ரசிக்க வைத்தது. இந்த நான்கு உலக சாதனைகளையும் நோபல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனம் அங்கீகாரம் செய்து சான்றிதழ்களை வழங்கியது.
இதுகுறித்து சிறந்த பயிற்சியாளர் வெங்கடேஷ் கூறும்போது..,
4 உலக சாதனைகளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நிகழ்த்தி உள்ளோம். ஏற்கனவே தமிழக அரசு சிலம்பம் கற்றுக் கொண்ட வர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், பாரம்பரிய கலையான சிலம்பக் கலையை தமிழக பாடத்திட்டத்தில் சேர்த்து அதனை அனைவரும் கற்றுக் கொள்ளும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் காலகாலமாக வலியுறுத்தி வருகிறோம். தற்போதும் வலியுறுத்துகிறோம் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தும் சான்றிதழ்களை வழங்கி நிறைவு செய்தும் வைத்தார்.