இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
கேரளா மாநிலம், இடுக்கி அருகே புல்லுப்பாறை அருகே கேஎஸ்ஆர்டிசி பேருந்து 34 பயணிகளுடன் இன்று அதிகாலை 6,15 மணிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து வளையும் போது எதிர்பாராத விதமாக 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில், விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் நீண்ட நேரமாகப் போராடி விபத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களை மீட்டனர்.
இந்தவிபத்தில், மாவேலிக்கரைப் பகுதியைச் சேர்ந்த 2 ஆண்களும், 2 பெண்களும் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். அதில் இருவர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அரசு பேருந்தினை வாடகைக்கு எடுத்து, கேரள மாநிலம் மாவேலிக்கரை பகுதியில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் தஞ்சாவூருக்குச் சுற்றுலா சென்றது தெரிய வந்தது. இதன் பின் , சுற்றுலா முடிந்து அவர்கள் வீடு திரும்பி வந்து கொண்டிருந்த போது பேருந்து விபத்தில் சிக்கியதும் விசாரணையில் தெரிய வந்தது.பிரேக் பிரச்சினையால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.