• Tue. May 7th, 2024

செந்தில்பாலாஜி வழக்கில் 3ஆம் நீதிபதி இன்று விசாரணை..!

Byவிஷா

Jul 6, 2023

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். வழக்கை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தனர்.ஆனால் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தனர். இவர்களில் நீதிபதி ஜெ.நிஷா பானு, அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம். அவரை உடனே நீதிமன்றத்துக் காவலிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார்.

நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, ”செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. அவர் 10 நாட்களுக்குத் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறலாம். அதற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெற வேண்டும்” என்று கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனால் இந்த வழக்கை 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடத் தலைமை நீதிபதிக்கு இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர். தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து நேற்று உத்தரவிட்டார். இன்று செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *