

தென் கொரியாவில் கட்டுமானப்பணியின் போது பாலம் இடிந்து விழுந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தென் கொரியா தலைநகர் சியோலில் இருந்து தெற்கோ 90 கிலோ மீட்டர் தொலைவில் அன்சியோங் நகர் உள்ளது. இங்கு நெடுஞ்சாலைப்பணியோடு பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இப்பணியில் இன்று காலை ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். நெடுஞ்சாலை பாலத்தைத் தாங்கி நின்ற ஐந்து 164.04 அடி உயர தூண் கட்டமைப்புகள் திடீரென இடிந்து கீழே விழுந்தது. இதில் தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேரின் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தின் போது இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ள பலரைத் தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை விரைவுபடுத்த தென் கொரியா தற்காலிக அதிபர் சோய் சாங் மோக் உத்தரவிட்டுள்ளார்.
தென் கொரியாவின் தொழிலாளர் அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2020 மற்றும் 2023 ஆண்டுகளுக்கு இடையில், கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த போது குறைந்தது 8,000 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

