• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 28 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

Byவிஷா

Jun 17, 2022

தமிழக ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
அகவிலைப்படி என்பது பொருட்களின் விலையேற்றத்தை கணக்கிட்டு அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து கொடுப்பது ஆகும். முன்னதாக, 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் கடந்த 7, 8, 9 ஆம் தேதிகளில் சில கூட்டுறவு தொழிலாளர் சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு தொழிலாளர் சங்கங்கள், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்திருந்தன. இந்த நிலையில் தமிழக அரசு, ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28 சதவிகிதம் உயர்வு அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இவ்வாறு விரிவான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன: “கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 22.02.2021 முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14சதவீதம் அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டிருந்தது.
1.01.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14சதவீதம் அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசீலித்து 1.01.2022 முதல் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28சதவீதம் அகவிலைப்படி பெறவும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களை பெறவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ரேஷன் கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2,852 கட்டுநர்கள், என மொத்தம் 22,510 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்” என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.