25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் புலியகுளம் கால் பந்து போட்டி! உள்ளூரில் தொடங்கி தேசிய அளவில் சிகரம் தொட்டது!
கோவை புலியகுளம் கால்பந்து கழகத்தின் சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு 24 ஆண்டாக கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
உள்ளூரில் தொடங்கிய போட்டி நகரம், மாவட்டம், மாநிலம் என அடுத்தடுத்து முன்னேறி தற்போது 25ம் ஆண்டில் தேசிய அளவிலான போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் போட்டியாக உருவெடுத்துள்ளது.
இந்த போட்டிகளில் ஒருங்கிணைப்பாளர்கள், போட்டியாளர்கள், பார்வையாளர்கள், பொருளாதார உதவிகளை வழங்குபவர்கள் உள்ளூர் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தற்போது வரை 25வது ஆண்டாக ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
இது வரை கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து, நடைபெறும் பரிசளிப்பு விழாக்களில் கோவை மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் சமூக சிந்தனை கொண்ட பொருளாதார உதவி வழங்குனர்கள் உள்ளிட்ட பலர் வெற்றி பெற்றவர்களுக்கு புலியகுளம் கால் பந்து கழகத்தின் சார்பில் கோப்பைகள் மற்றும் பண பரிசுகளை வழங்கியுள்ளனர்.
அதேபோல, இறுதி போட்டியின் நடுவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பல்வேறு வகையான சிலம்பம் போன்ற சாகசங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் கால்பந்து போட்டியில் பெண்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பெண் சிறுமியர்கள் மைதானத்தில் மாதிரி கால்பந்து விளையாடுவதை தொடர்ந்து வழக்கப்படுத்தி வருகின்றனர்.

இப்படி தொடர்ந்து செயல்பட்டு இந்த ஆண்டு 25ம் வருடமாக பொங்கலை முன்னிட்டு, வெள்ளி விழா கொண்டாட்டமாக 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஐவர் கால் பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிகளில் தேசிய அளவில் சிறந்த போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். 4 நாட்களாக நடைபெறும் இந்த கால் பந்து திருவிழாவில் 80க்கும் மேற்பட்ட அணிகள், 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு அசத்தி வருகின்றனர்.
பகல் இரவாக மின் ஒளியில் ஜொலிக்கும் போட்டியை காண எங்கெங்கோ இருந்து பார்வையாளர்கள் வருகின்றனர். மேலும் இறுதி போட்டி 14ம் தேதி மாலை நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு 1லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. தொடர்ந்து பார்வையாளர்களுக்கு குழுக்கல் முறையில் டிவி உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

இப்படி அரசியல் கலப்பு இல்லாமல் தொடர்ந்து மாபெரும் போட்டி நடத்தி வரும் பி.எப்.சி என்ற புலியகுளம் கால் பந்து கழகம் அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.