• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

கோவையில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற தங்க, வைர நகைகள் பறிமுதல்..,

BySeenu

Apr 16, 2026

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 10.18 கோடி தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில், சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு வருகிற 23 ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி நெருங்குவதால், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கொடிசியா அருகே பறக்கும் படை அதிகாரிகள் சாமிநாதன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் பார்சல்களில் ஏராளமான தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்தது. இதை தொடர்ந்து வாகனத்தில் வந்தவர்களும் அந்த நகைகளுக்கான ஆவணங்கள் உள்ளதா ? என பறக்கும் படை அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை,

இதனை தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தை கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நகைகள் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், கோவையில் உள்ள கடைகளுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், அதில் இருந்து 6 கிலோ தங்க நகைகள், 8.5 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு மொத்தம் ரூபாய் பத்து கோடியே 18 லட்சம் ஆகும். இந்த பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் துணை தாசில்தார் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த நகைகள் கருவூலத்தில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். இதுபோன்று கோவை தெற்கு தொகுதியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்று கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 14.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கோவையில் இன்று வரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மொத்தம் ரூபாய் 30 கோடியை மதிப்பிலான ரொக்கம் நகைகள், போதைப்பொருட்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து ரூபாய் 5 கோடி 6 லட்சம் பணம் உரியவர்களிடம் திரும்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.