

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென தரையில் மோதி விபத்திற்குள்ளானதில் விமானி உள்பட இருவர் பலியான சம்பவம் பிரேசிலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் உள்ள சவோ பாலோ நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் பாரா பாண்டா என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தது. இந்த விமானத்தில் விமானி, விமான உரிமையாளர் என 2 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிகிறது.
வானில் பறந்து கொண்டிருந்த விமானம் பரபரப்பான சாலையில் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்த அடுத்த நொடியே விமானம் பற்றி எரிந்தது. விமானம் தரையில் மோதிய போது பேருந்து ஒன்று சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசார் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. அவர்களது உடல்களை மீட்புப்படையினர் மீட்டனர். மேலும், விபத்துக்குள்ளான பகுதியில் படுகாயமடைந்த இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பரபரப்பான சாலையில் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் பிரேசிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

