• Thu. Mar 28th, 2024

வரைவு வாக்காளர் பட்டியலில் 17 வயது நிரம்பியவர்கள் பெயர் சேர்க்க நல்ல வாய்ப்பு

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கவுள்ளது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
ஆதார் இணைப்பு திட்டத்தை நிறைவு செய்யவும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகிய பணிகளை மேற்கொள்ள இம்மாதம் சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் கமிஷன் முடிவெடுத்து உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடிதம் எழுதியுள்ளார்.
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25 தேதி தொடங்கி, கடந்த 7ம் தேதியோடு நிறைவடைந்தது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வெளியிடப்படுகிறது. இந்த நாளின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம், முறையான வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பு என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்த முடிவு செய்துள்ளது.
அதேபோல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி இன்று தொடங்கவுள்ளது. டிச. 8ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும். இந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம், முகவரியில் திருத்தம், புதிய வாக்காளர் பெயர் சோர்ப்பு ஆகியவற்றுக்காக மனுக்களை அளிக்கலாம். இந்த ஆண்டில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுவிடும். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணைத் தெரிவிப்பதற்கான படிவம் 6பி-ஐ பூர்த்தி செய்து அளிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *