• Fri. Apr 26th, 2024

இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு:
வழக்கு பதிவு செய்ய தயங்கிய போலீசார்

நீண்ட இழுபறிக்கு பின்னர் பஞ்சாப் மாகாண போலீசார் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் மாகாண போலீசுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய பஞ்சாப் மாகாண போலீசார் மறுத்து வந்தனர். இம்ரான்கான் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை மந்திரி ரானா சனாவுல்லா மற்றும் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் பைசல் நசீர் ஆகியோரின் பெயர் இருப்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்ய தயக்கம் காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனிடையே இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து விசாரணை நடத்திய பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் 24 மணி நேரத்துக்குள் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென போலீசுக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பின்னர் பஞ்சாப் மாகாண போலீசார் இந்த சம்பவம் குறித்து நேற்று வழக்கு பதிவு செய்தனர். எனினும் இந்த வழக்கில் இம்ரான்கானை துப்பாக்கியால் சுட்ட நவீத் முகமது பஷீரை முதன்மை குற்றவாளியாக குறிப்பிட்டுள்ளதாகவும், பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக இம்ரான்கான் தரப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *