• Thu. Apr 25th, 2024

புயல் மீட்பு பணியில் 16 ஆயிரம் போலீசார் போலீஸ் கமிஷனர் தகவல்

சென்னையில் புயல் மீட்பு பணியில் 16 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் குவிக்கப்பட்டிருந்த புயல் மீட்பு படையினரை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் சந்தித்து பேசினார். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களையும் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- சென்னையில் புயல் மீட்பு பணியில் 16 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு துணையாக 1500 ஊர்க்காவல் படை வீரர்களும் களத்தில் உள்ளனர். இதோடு தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் சிறப்பு காவல் படையினரும் பணியில் உள்ளனர். இவர்கள் தவிர 12 மீட்பு குழுவினர் மற்றும் 4 படகு குழுவினர் ஆங்காங்கே முகாமிட்டு உள்ளனர். இந்த குழுக்களில் உரிய பயிற்சி பெற்ற 150 வீரர்கள் உள்ளனர். கடந்த காலங்களில் புயல் தாக்கியபோது, ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிக்கு யாரும் போகக்கூடாது. தேவை இல்லாமல் யாரும் சாலையில் சுற்றவும் கூடாது. 24 மணி நேரமும் போலீசார் ரோந்து வாகனங்களில் சுற்றி, சுற்றி வருகிறார்கள். பழமையான கட்டிடங்கள் மாநகராட்சியால் கணக்கெடுக்கப்பட்டு, அதில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2 மணி நேரத்துக்கு ஒரு முறை புயல் பாதிப்பு நிலவரம் மற்றும் சென்னையில் உள்ள கள நிலவரம் சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *