• Tue. Sep 17th, 2024

15 வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம்..

Byகாயத்ரி

Mar 26, 2022

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை அறிமுகம் ஆவதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

அதிக தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை ஏ பிரிவிலும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகியவை பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாகி இருக்கிறார். ஆனாலும், ஒரு வீரராக டோனி நீடிப்பது சென்னை அணிக்கு பலமாகும்.

கடந்த சீசனில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை வசப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, வெய்ன் பிராவோ, அம்பதி ராயுடு, உத்தப்பா ஆகியோர் நம்பிக்கை தருகின்றனர். கொல்கத்தா அணியை பொறுத்தவரை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஆண்ட்ரு ரஸ்செல், ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா மிரட்டுவார்கள். பந்து வீச்சில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, டிம் சவுத்தி, ஷிவம் மாவி ஆகியோர் வலு சேர்க்கிறார்கள்.சமபலம் மிக்க இரு அணிகள் மல்லுகட்டுவதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் சென்னையும், 8-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *