மகா சிவராத்திரியை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாதம்தோறும் திருவிழாக்கள் நடந்து வரும் நிலையில், தற்போது மாசி மண்டல திருவிழா நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து மகா சிவராத்திரி உற்சவம் இன்று நடைபெறும் நிலையில் இரவு முழுக்க நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனை இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ளது.
மீனாட்சி அம்மன், சுவாமி மற்றும் உற்சவர் சன்னதிகளில் விடிய, விடிய அபிஷேகப் பொருட்கள் மூலம் அபிஷேக, ஆராதனைகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.இந்நிலையில் மீனாட்சியம்மன் கோவில் சுவாமி சன்னதி அருகே 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. அதில் லிங்க வடிவில் சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி உற்சவர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் மீனாட்சியம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
பொதுமக்கள், சிவ பக்தர்கள் பால், தயிர், இளநீர், பன்னீர் பழவகைகள், தேன், மஞ்சள்பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேகப் பொருட்களை நேற்று மாலை வரை கோயிலில் உள்ள உள்துறை அலுவலகத்தில் கொடுத்த வண்ணம் இருந்தனர். மகாசிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். மேலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.