தமிழ்நாடு அரசு பேருந்துகளில் இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அதிநவீன மிதவை பேருந்து, குளிர்சாதன பேருந்து, குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து, கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்துகள் என மொத்தம் 1,082 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலம், ஒரு மாதத்துக்கு முன்பே பயணச் சீட்டை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், “பயணிகள் நீண்ட தூர பேருந்துகளில் பயணிப்பதை ஊக்குவிக்கவும், ரயில் மற்றும் தனியார் பேருந்து போன்றவற்றில் பயணிப்போரை ஈர்க்கவும், இணையவழி முன்பதிவு வாயிலாக இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்” என, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.தற்போது, அந்த அறிவிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சலுகை விழா நாட்களுக்கு பொருந்தாது என விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி
