• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

10 லட்சம் பேர் வேலைநிறுத்தம்- வங்கி சேவைகள் அனைத்தும் முடங்கியது

Byமதி

Dec 16, 2021

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்து, கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிடது.

இதற்கு வங்கி பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த எதிர்ப்பை மீறி, நடப்பு பாராளுமன்ற தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக கூடுதல் தொழிலாளர் ஆணையர், இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள், நிதித்துறை பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து நாடு முழுவதும் வங்கிகளை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஊழியர்கள் முடிவு செய்த வங்கி ஊழியர்கள், இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மட்டும் 6,500 வங்கிகள் மூடப்பட்டு, சுமார் 90 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளை மேலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் இன்று வேலைக்கு செல்லவில்லை. நாடு முழுவதும் 1 லட்சத்து 18 ஆயிரம் வங்கிகள் செயல்படவில்லை.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டனர். வங்கிகளுக்கு நேரடியாக சென்று பணம் செலுத்த முடியாமலும், முதிர்வடைந்த பணத்தை எடுக்க முடியாமலும், காசோலை பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமலும் பொதுமக்கள், பெரும் தொழில் அதிபர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இன்று தொடங்கிய வேலைநிறுத்தம் நாளையும் நீடிக்கும் என வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் வங்கி பணிகளில் மேலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் கருவூல கணக்குகளும் முடங்கி உள்ளன. இதனால் அரசு பணிகளிலும் சுணக்கம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. காசோலைகள் வங்கிகளில் முடங்கி கிடப்பதால் இந்த ஏற்றுமதி – இறக்குமதி தொழில்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.

இது தொடர்பாக பாரத் ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க சென்னை வட்ட பொதுச்செயலாளர் கிருபாகரன் கூறியதாவது, நாடு முழுவதும் வங்கி பணிகள் இன்றும், நாளையும் கடுமையாக பாதிக்கப்படும். இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் எங்களுக்கு சம்பள பாதிப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. இருப்பினும் தொழிலாளர்கள் நலன் கருதி இந்த வேலைநிறுத்தத்தை தொடங்கி இருக்கிறோம். நாளை வரை நிச்சயம் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.

இதன் மூலம் நாடு முழுவதும் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்படும். தமிழகத்தில் வங்கிகள் மூடப்பட்டு உள்ளதால் ரூ.500 கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 2 லட்சம் காசோலைகள் தேங்கி உள்ளன. நாடு முழுவதும் 10 லட்சம் காசோலைகளை பணபரிவர்த்தனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்.
என அவர் கூறி உள்ளார்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் மத்திய அரசின் வங்கிகள் தனியார்மய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.