• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

குழந்தை திருமணத்தை  தடுக்க முடியலை… அரசு அதிகாரி ஒப்பன் டாக்!கவனிப்பாரா கீதா ஜீவன்?

Byமுகமதி

Oct 26, 2025

கடந்த நூற்றாண்டில் குழந்தை திருமணம் என்பது சாதாரணமாக பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது குழந்தைத் திருமணங்களுக்கு சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பல்வேறு தடைகள் வந்திருக்கின்றன.

ஆனாலும் தொடர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று தான் வருகின்றன. இவற்றை தடுப்பதற்கு சமூக நலத்துறை தொடர்ந்து போராடி வருகிறது .

இந்த நிலையில் தான் அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி பேசுகையில்,  “குழந்தைத் திருமணங்களை எங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை” என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

மேடையிலேயே மேலும் அவர்,  “ குழந்தைத் திருமணங்கள் என்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டியதுதான் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று விசாரிக்கும் போது… பெற்றோர்களே எங்களிடம், ‘ இப்போது உள்ள சூழ்நிலையில் இளம்பெண்கள் காதல் வயப்பட்டு விடுகிறார்கள். அதனால் அவர்களது வாழ்க்கை தடம் மாறி போகிறது.  அதைத் தடுப்பதற்கே இளம் வயதில் திருமணம் செய்து வைக்கிறோம்’ என அதிகாரிகளிடமே சொல்கிறார்கள். இதனால் குழந்தைத் திருமண முறைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை” என்றும் பேசியிருக்கிறார்.

சமூக நலத்துறையின் உயரதிகாரியே இப்படி ஒப்புதல் வாக்குமூலம் பேசியிருப்பதற்கு பின்னணி என்ன? சமூக நலத்துறை வட்டாரங்களிலேயே விசாரித்தோம்.

 “மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா பேசியது நூற்றுக்கு நூறு உண்மை.  இன்னமும் கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய சமுதாயத்தினரிடம்  குழந்தைத் திருமணம் பழக்கம் இருக்கிறது. அவர்கள் ஏன் கல்வி, பொருளாதாரத்தில் இன்னமும் பின் தங்கியிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு சமூக நலத்துறையை மட்டும் காரணமாக்க முடியாது. ஒட்டுமொத்த அரசுமே அதற்குப் பொறுப்பு.  

சிறுவயதிலேயே திருமணம் செய்வது சரிதானா தவறா என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்த கூட அந்தப் பகுதிகளுக்கு சமூக நலத்துறையோ இன்ன பிற துறைகளோ அங்கு செல்வதில்லை.  சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் அலட்சியமே  குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கக் காரணம்.

குழந்தைத் திருமணம் நடைபெறப் போகிறது என்றோ, அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள் என்றோ புகார் வந்தாலும் அதைக் கூட முறையாக சமூகத்துறையின்  அலுவலர்கள் சென்று விசாரிப்பதில்லை.  புகார் வந்தால் உடனடியாக சென்று விசாரிக்க வாகன வசதி இல்லை என்ற புகார் ஊழியர்கள் மத்தியில் இருக்கிறது.

ஆனால் மாதந்தோறும் 40 ஆயிரம் முதல் 50,000 வரை வாடகை கணக்கெழுதி சாப்பிட்டு விடுவார்கள்.  பயணம் செய்ய வேண்டிய ஊழியர்களை சொந்தச் செலவில் சென்று வர நிர்பந்திக்கிறார்கள்.  

அப்படியே தகவல் கிடைத்து விசாரணைக்குச் சென்றாலும் அவர்கள் எடுக்கும் ஆக்‌ஷன் என்ன தெரியுமா?  குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக பணத்தை வாங்கிக் கொண்டு பஞ்சாயத்து பேசி முடித்துவிடுகிறார்கள்.  இதனால்   பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தன்மையாகவும் இருக்கிறது

சமூக நலத்துறையில் அப்பிரிவில் பணியாற்ற   எம்.எஸ்.டபிள்யூ என்கிற முதுநிலை சமூகவியல் படிப்பு படித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு படிக்காத நபர்கள் எல்லாம் இத்துறையில் பணியாற்றுகின்றனர்.   கடந்த அதிமுக ஆட்சி காலத்தில்  தொடங்கி திமுக ஆட்சியிலும் இது தொடர்கிறது.

புதுக்கோட்டை பழைய மருத்துவமனையில் இயங்கும் சமூக நல அலுவலகத்தில் திருச்சியை சேர்ந்த எஸ்.நிர்மலாராணி அட்மினாக இருக்கிறார். விதிமுறைகளின் படி அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான் பணியில் இருக்க வேண்டும். ஆனால் இவரோ திருச்சி மாவட்டத்திலிருந்து பணிக்கு வருகிறார்.  அதனால் உரிய நேரத்தில் வருவதில்லை. மேலும் இவர் சமூகவியல் படிப்பு படிக்காதவர். விஷயம்  வெளியே தெரிந்தபின் படிக்கத் தொடங்கியிருக்கிறார்.  

மேலும் விருப்பமில்லாத திருமணங்களை நடத்தி வைத்து விட்டாலும் பெண்கள் இங்கு வந்து புகார் செய்யலாம் என்பது விதி. ஆனால் அந்த புகார்களை விசாரிக்கும் போது பெண்களை சமாதானப்படுத்தி அல்லது கட்டாயப்படுத்தி கணவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிலையும் நிறைய பிரச்சனைகளில் நடந்திருக்கிறது.

இதெல்லாம் இங்கு உள்ள அட்மின் நிர்மலாதேவியின் ஒப்புதலுடன்தான் நடக்கிறது.  சரியான அதிகாரி உரிய தகுதியோடு இருந்து விசாரணை செய்தால் இந்த பிரச்சனைகளை ஏராளமாக தீர்த்துவிட முடியும். அவ்வாறு செய்யாததற்குக் காரணம் சமூக நலத்துறைதான்.

சமூகத்தில் நடைபெறும் குழந்தைத் திருமணங்கள் உள்ளிட்ட பெண்களுக்கான பிரச்சனைகளை விசாரித்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது சமூக நலத்துறை… ஆனால் சமூக நலத் துறையிலேயே இவ்வளவு பிரச்சினைகள் என்றால்?

சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கவனிப்பாரா?