• Wed. Apr 17th, 2024

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து வழக்கு : தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு, இடைக்கால தடை விதிப்பதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இருப்பினும், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஏற்கனவே நடந்த மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் மாற்றம் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த வன்னியர் சமூக மக்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய அ.தி.மு.க அரசு அறிவித்தது. ஆனால் அது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை.. அதற்குள்ளாக சட்டமன்ற தேர்தல் வந்து தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சியை பிடித்த திமுகவும் 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு அரசாணை எதுவும் பிறப்பிக்கவில்லை.

இதற்கிடையே வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும், தேர்தலைக் கருத்தில் கொண்டு அவசரமாக இந்தச் சட்டத்தை இயற்றியதாகக் கூறி, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் , சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றம் பிறப்பித்த வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது என்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், 10.5% இட ஒதுக்கீட்டின்படி ஏற்கனவே நடந்த மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் மாற்றம் செய்யக்கூடாது என்றும், அடுத்த உத்தரவு வரும் வரை மாணவர் சேர்க்கையோ, பணி நியமனங்களோ செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 15 மற்றும் 16-ம்தேதிகளில் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *