• Tue. Apr 23rd, 2024

மதிப்பீடு கணக்கிடும் முறை – கால அவகாசத்தை நீட்டித்தது சி.பி.எஸ்.சி

Byadmin

Jul 22, 2021

கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறையை சிபிஎஸ்இ அறிவித்தது. பிளஸ் 2 வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40%, 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்ணை எடுத்து மொத்த மதிப்பெண் கணக்கிடப்பட்டு, ஜூலை 31ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.பிளஸ் 2  மாணவர்களுக்கான மதிப்பெண்ணைக் கணக்கிட்டு பள்ளிகள் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது. இருப்பினும், பல பள்ளிகள் இந்தப் பணிகளை முடிக்காததால் மதிப்பெண் கணக்கிடுவதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஷன்யம் பரத்வாஜ் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில், ‘‘பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண்ணைக் கணக்கிடுவதற்கு பள்ளிகளுக்கு தரப்பட்ட அவகாசம் ஜூலை 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. பள்ளிகள், ஆசிரியர்களின் நலன்கருதி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மதிப்பெண்ணை இறுதி செய்வதில், பள்ளிகளுக்கு உதவுவதற்காக, தலைமையகத்தின் தேர்வு பிரிவு மற்றும் பிராந்திய அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இதை பயன்படுத்தி, பள்ளிகள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 25ஆம் தேதிக்குள் மதிப்பெண்ணைக் கணக்கிடாத பள்ளிகளின் முடிவுகள் தாமதமாக வெளியிடப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மற்றொரு அறிவிப்பையும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 ,12ஆம் வகுப்புகளுக்கான தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி பொதுத்தேர்வு நடத்தப்படும். வழக்கமான மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு முறையை பின்பற்ற முடியாது என்பதால், தனி தேர்வர்கள் தேர்வு எழுதுவது அவசியம். உயர்கல்வியில் சேருவதில் அவர்களுக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்படாமல் இருக்க அவர்களின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *