

பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ், சுவாமிநாதன் ஆகியோர் கடந்த ஒரு வார காலமாக தலைமறைவாகிவிட்டனர். பாஜகவை சேர்ந்த இவர்கள் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான மூன்று பால் பண்ணைகள், கும்பகோணம் அருகே மருதாநல்லூர், கொற்கை ஆகிய இடங்களில் உள்ளது. இங்கு 384 கறவை மாடுகள் உள்ளன .
மாடுகளுக்கு தேவையான வைக்கோல், தவிடு, புல், மற்றும் தீவனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த கறவை மாடுகளை கவனித்துக்கொள்ளும் ஊழியர்களுக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஊழியர்கள் மற்றும் இந்த பால்பண்ணைகளுக்கு வைக்கோல் , தவிடு, தீவனங்கள் தவிடு போன்ற பொருட்களை அனுப்பிய பலருக்கு 70 லட்சம் ரூபாய் வரை பண்ணை உரிமையாளர்கள் நிலுவை வைத்துள்ளனர் .
இது தொடர்பாக பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் இவர்கள் ஏற்கெனவே புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மூன்று பால் பண்ணையில் உள்ள மாடுகளை காப்பாற்றும் முயற்சியாக கும்பகோணம் கோட்டாட்சியர் திருமதி சுகந்தி, வட்டாட்சியர் உள்ளிட்டோர் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மாடுகளுக்கு உடனடியாக தேவையான வைக்கோல் உள்ளிட்ட தீவனங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கும்பகோணம் கோட்டாட்சியர் தெரிவித்தார்.
மேலும் தற்போதைக்கு இந்த மாடுகளை வேறு இடங்களுக்கோ அல்லது கோ சாலைகளுக்கோ இடம் மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதனிடையே பண்ணைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகைக்கு ஈடாக மாடு கன்றுகளை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

