

வீட்டு வசதி வாரியத்தின் கட்டுமான பணிகளில் சட்டத்துக்குப் புறம்பாக இனி எதுவும் இருக்கக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருப்பதாகவும் சட்ட விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், என்னென்ன பணிகளில் மாற்றம் செய்ய வேண்டும் துரிதப்படுத்த வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுடனான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது எனவும், தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல துணை நகரங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். துணை நகரங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருவதாக கூறியவர் மாடல் நகரமாக உருவாக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதாக கூறினார். அதேபோல ஆட்டோ நகரங்களை உருவாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது எனவும் பெருந்துறை திருச்செங்கோடு பகுதிகளில் இந்த நகரங்களை உருவாக்கினால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட பழுதடைந்த கட்டிடங்களை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதால் மாற்று இடங்களில் கட்டிடங்கள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது எனவும், பத்திர பதிவு செய்யாமல் டாக்குமெண்ட் கொடுக்கப்படாமல் இருப்பவர்களுக்கு விரைவில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். வீட்டு வசதி வாரியத்தின் கட்டுமான பணிகளில் சட்டத்துக்குப் புறம்பாக எதுவும் இருக்கக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார் என தெரிவித்த அவர், சட்ட விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். ஏற்கனவே கோவை மாஸ்டர் பிளான் 1211 சதுர கிலோ மீட்டராக உள்ள நிலையில், கூடுதலாக ஆயிரத்து 558 சதுர கிலோ மீட்டர்கள் சேர்க்கப்பட உள்ளது எனவும் புதிய மாஸ்டர் பிளான் ஒன்றரை ஆண்டுகளில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்தில் தவறுகள் நடந்திருந்தால் அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
