பெட்ரோல் விலையைக் குறைத்து மோடி செய்யமுடியாததைக் கூட செய்து காட்டியவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் வரை குறைக்கப்படுவதாக அறிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி அறிவிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது: நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவாகாரம் குறித்து மோடியும், அமித் ஷாவும் அறிக்கை சமர்ப்பித்திருந்தாலே பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம் என்றும், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்தக்கூடாது என சொல்லவில்லை. வேண்டுமென்றே அப்படி பிரச்சாரம் செய்யப்படுவதாக தெரிவித்தார்.
2 மணிநேரம் கூட விவாதத்தை நடத்த முடியாமல் மோடி அரசு தான் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்ததாகவும் குற்றச்சாட்டினார். ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 3 ரூபாய் வரை குறைத்து மோடியால் செய்ய முடியாததை ஸ்டாலின் செய்து முடித்துள்ளார். இது தமிழகத்தின் நிதி நெருக்கடியை பாதிக்கும் என்ற போதும் எளிய மக்கள் நலம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் திமுக அரசு கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளதாக புகழாரம் சூட்டினார்.