


இன்று காலையில் இருந்தே முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பற்றிய செய்தி ஒன்று பரப்பாக பரவி வருகிறது. நேற்று மாலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், பாரத பிரதமர் மோடி தலைமையில் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதன் உண்மை தன்மை குறித்து எமது அரசியல் டுடே செய்தித்தளத்தின் தலைமை செய்தி ஆசிரியரான பாக்யராஜ் அவர்கள், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜவர்மனிடம் தொலைபேசியில் கலந்துரையாடிய பிரத்யேக ஆடியோவை உங்களுக்காக வெளியிட்டுள்ளோம்…



அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று இரவு திடீரென விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரது டெல்லி பயணம் அரசியல் அரங்கில் பரபரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சொத்து குவிப்பு வழக்கில் ராஜேந்திர பாலாஜி மீதான பிடி இறுகும் நிலையில் அவரின் டெல்லி பயணத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொகுதி மாறி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டார், இருப்பினும் திமுகவின் தங்கபாண்டியனிடம் குறைவான வாக்கில் தோல்வி அடைந்தார். அதிமுக அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்த போது பேசிய பல்வேறு கருத்துக்கள் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக 2019ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மோடி தான் எங்கள் டாடி என்றும், பிரதமர் மோடி இருக்கும் வரை எங்களை யாரும் மிரட்ட முடியாது என பேசி பரபரப்பை கூட்டினார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாக பரபரப்பான செய்திகள் வெளியாகின. திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்ற ராஜேந்திர பாலாஜி, அமித்ஷா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே முன்னாள் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணையப் போவது கிடையாது என்றும், கடைசி மூச்சு வரை அதிமுகவில் தான் இருப்பார் என அவரது நெருங்கிய நண்பரும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜவர்மன் அடித்துக் கூறியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வான ராஜவர்மன் உடன் அரசியல் டுடே செய்தித்தளத்தின் தலைமை செய்தி ஆசிரியர் பாக்யராஜ் நடத்திய பிரத்யேக கலந்துரையாடல் ஆடியோ இதோ உங்களுக்காக….

