• Fri. Apr 18th, 2025

பெரிய கோயில் மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்…

Byadmin

Aug 1, 2021

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது. மேலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, கோயில்களில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு கோயில்கள் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பெரிய கோவில், சுவாமிமலை, திருநாகேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் மூடப்பட்டுள்ளது. இதேபோல் திருவையாறு கும்பகோணம் ஆகிய பகுதிகளில் காவிரி கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லணை, மனோரா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்த அறிவிப்பும் இல்லாமல் பெரிய கோவில் மூடப்பட்டதால், காலை முதல் பெரிய கோவிலை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் அங்கு வந்த சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், நேற்று இரவு இரவு வரை எந்த அறிவிப்பும் இல்லை, நாங்கள் இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் சுற்றி பார்ப்பதற்காக பெரிய கோவில், வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு வந்ததாகவும் ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாமல் கோயில்கள் மூடப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தாங்கள் அடுத்தடுத்த சுற்றுலா தலங்களுக்கு செல்வதா இல்லை, இப்படியே வீடு திரும்புவதா என்ற குழப்பத்தில் இருப்பதாகவும், குழந்தைகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். தடை விதிப்பது, பக்தர்களுக்கு அனுமதி மறுப்பது உள்ளிட்ட உத்தரவுகளை முன்கூட்டியே தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.