

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணேசபுரத்தை சேர்ந்தவர் சிவதாணு இவர் தாசில்தாராக இருந்து ஓய்வு பெற்றவர்.தற்போது கணேசபுரம் பகுதியில் வசித்து வரும் இவருடன் இவரது தங்தை மகன் விக்னேஸ்வரராமும் வசித்து வருகிறார்.ஆனால் விக்னேஸ்வரராமற்கு கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை சரியில்லாமல் இருந்து வருகிறது.இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மருமகனான விக்னேஸ்வரராமை சிவதாணு பராமரித்து வந்த நிலையில் இன்று விக்னேஸ்வரராம் செலவுக்கு பணம் கேட்டு சிவதாணுவை தொந்தரவு செய்துள்ளார்.ஆனால் சிவதாணு பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரராம் தனது மாமாவின் கழுத்தை நெரித்தும் காலால் சிவதாணுவை மிதித்தும் கொலை செய்ததாக கூறப்படுகிறது.பின்னர் விக்னேஸ்வரராம் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் சம்பவம் பற்றி தகவல் கிடைத்த கோட்டார் போலீசார் விரைந்து சென்று சிவதாணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அங்கு விசாரணையை மேற்கொண்ட போலீசார் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய விக்னேஸ்வரராமை கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
