கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி அளித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதற்கான நடைமுறையை தொடங்கியது. கூட்டுறவு வங்கிகளில் நகைகளை வைத்து கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் படி தமிழகத்தின் நிதி நிலையை பார்க்கும் போது, திமுக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாது என அதிமுகவினர் விமர்சித்து வந்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவதற்காகத்தான் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா..? என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏவுமான ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பினார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது: நீங்கள் கேட்கலாம் – விவசாயிகளுடைய கடனைத் தள்ளுபடி செய்வோம்; நகைக் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றெல்லாம் சொன்னீர்களே! அதற்கெல்லாம் மழுப்பலான பதிலைச் சொல்லியிருக்கின்றீர்களே! என்ற அந்த அடிப்படையிலே உறுப்பினர் உதயகுமார் இங்கே பேசியிருக்கலாம்.
உறுதியாகச் சொல்கிறேன்.
அந்த நகைக்கடன் வழங்க வேண்டுமென்று நாங்கள் கருதினாலும், அதில் பல முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. விவசாயிகளுடைய பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, அதிலும் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. அதையெல்லாம் முறையாக சரிசெய்து, அதற்குப் பிறகு நிச்சயமாக அது வழங்கப்படும் என்ற உறுதிமொழியைச் சொல்லியிருக்கிறோம்.
கடந்த ஆட்சியில் அவசர அவசரமாக தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன்களில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளது. அவை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது ஆதாரத்துடன் எடுத்துரைக்கப்படும். முறைகேடுகள் சரிசெய்யப்பட்டு, பின்னர் கடன் தள்ளுபடி செய்யப்படும், எனக் கூறினார்.
அப்போது, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிலமில்லாத எத்தனை பேருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது, எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, 2.5 லட்சம் நிலங்களை ஏழை, எளிய மக்களுக்கு திமுக அரசுதான் பிரித்துக் கொடுத்தது எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களும் உறுதியாக நிறைவேற்றப்படும். தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்,” எனக் கூறினார்.