தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் “ஈரமாவு மற்றும் ரொட்டித்தூள் பயன்படுத்தி மீன் பொருட்கள் தயாரிப்பு” குறித்து மூன்று நாள் தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஜூலை 14 முதல் 17 வரை “ஈரமாவு மற்றும் ரொட்டித்தூள் பயன்படுத்தி மீன் பொருட்கள் தயாரிப்பு” பற்றிய 3 நாள் தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி பட்டியல் இன சமூகத்திற்கு வழங்கப்பட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்திய மீன்வளத் தொழில்நுட்ப நிலையத்தின் பட்டியல் இன சமூகம் மற்றும் பகுதி திட்டம் நிதியுதவியுடன் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்ட ஊரக பகுதியைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தை சார்ந்த மொத்தம் 20 மகளிர் பயிற்சி பெற்று பயனடைந்தனர். இப்பயிற்சியினை மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையும் மீன்பதனத் தொழில்நுட்பத் துறையும் இணைந்து நடத்தியது. இந்நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் (பொ), சுஜாத்குமார் துவக்கி வைத்து, இப்பயிற்சியின் முக்கியத்துவத்தையும், ஏற்கனவே இது போன்ற பயிற்சி பெற்ற பயனாளிகள் மீன்பதனம் மற்றும் அதன் சார்ந்த தொழிலில் தொழில் முனைவோர்களாக உருவாகி வளர்ந்து வருகிறார்கள் என்றும் கல்லூரியின் ஆலோசனைகளை பெற்று பயிற்சியாளர்கள் பயனைடயுமாறு அறிவுறுத்தினார்.
மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் இரா. சாந்தகுமார் பயிற்சியாளர்களை வரவேற்றார். இப்பயிற்சியால் பயிற்சியாளர்களுக்கு மீன் குச்சி, மீன் பர்கர், மீன் கட்லெட் மற்றும் மீன் கோலா உருண்டைகள் செய்வது குறித்த செயல் விளக்கப்பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் மீன் ஊறுகாய் தயாரிப்பு குறித்தும் கற்றுத்தரப்பட்டது. உதவிப்பேராசிரியர் கோ. அருள் ஓளி நன்றியுரை ஆற்றினார்.
இப்பயிற்சியின் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொ), சுஜாத்குமார் தலைமை வகித்தார். இவ்விழாவில் தலைமை விருந்தினராக மாவட்ட தொழிற்துறை மையம் பொது மேலாளர் சொர்ணலதா, கலந்துக்கொண்டு பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். நிறைவாக மீன்பதனத் தொழில்நுட்பத்துறை உதவிப்பேராசிரியர் ப.கணேசன் நன்றியுரை ஆற்றினார்.