

தூத்துக்குடியில் நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த அக்காள்-தங்கையிடம் 12 பவுன் செயின்களை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி ஜெபசெல்வி (30), சென்னை ஆற்காடு ரோட்டைச் சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி ஜெபகிறிஸ்டி (28). இவர்கள் இருவரும் சகோதரிகள். இருவரும் தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்திருந்தனர். இந்நிலையில், நேற்று மர்ம நபர்கள் இவர்களது வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர், தூங்கிக் கொண்ருந்த ஜெபசெல்வி கழுத்தில் அணிந்திருந்த 7பவுன் செயினையும், ஜெபகிறிஸ்டி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினையும் கட் பண்ணி திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெபசீலன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இவர்களது வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
