

சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் 4 படங்கள் அமேசான் நிறுவனத்தில் வெளியாகின்றன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியாவில் கரோனா 2-வது அலை தீவிரம் அவ்வப்போது குறைந்துவந்தாலும், சில நாட்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்புகள் 2000-க்கும் குறைவாக இருந்தாலும், ஒரு சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால் பல்வேறு படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பதே தெரியாமல் உள்ளது. இதனால் பல்வேறு தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களை ஓடிடி வெளியீட்டுக்குக் கொடுத்து வருகிறார்கள். தற்போது சூர்யா தனது 2டி நிறுவனம் தயாரித்து வரும் 4 படங்களை அமேசான் நிறுவனத்தில் வெளியிட முடிவு செய்து ஒப்பந்தம் செய்துள்ளார்.
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி நடித்துள்ள ‘உடன்பிறப்பே’, தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ஜெய்பீம்’, சாரோவ் சண்முகம் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘ஓ மை டாக்’, அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ உள்ளிட்ட படங்கள் அமேசான் நிறுவனத்தில் வெளியாகவுள்ளன.
செப்டம்பரில் ‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, அக்டோபரில் ‘உடன்பிறப்பே’, நவம்பரில் ‘ஜெய் பீம்’, டிசம்பரில் ‘ஓ மை டாக்’ படங்கள் வெளியாகவுள்ளன. ஒரே சமயத்தில் தனது 4 படங்களை ஓடிடி நிறுவனத்துக்கு சூர்யா கொடுத்திருப்பது விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாத்தே படத்தில் அண்ணன் தங்கை பாச பாடல்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இமான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி ‘அண்ணாத்த’ திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அண்ணாத்த படத்தின் கடைசி 15 நாள் படப்பிடிப்பு விரைவில் தொடங்கயிருக்கிறது. ரஜினி, மீனா உள்பட பலரும் டப்பிங் பேசி முடித்துவிட்டார்கள். குஷ்பு இப்போது டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார். படத்தில் அண்ணன் – தங்கை பாசம் மிளிர வைக்கும் ஒரு அழகான பாடலும் இருக்கிறது என்கிறார்கள். அதன் ஷூட்டிங்கும் ஐதராபாத்தில் தான் நடந்து முடிந்திருக்கிறது. கோல்கட்டா செல்ல இருந்த படக்குழு கொரோனா பரவலால் தங்கள் திட்டத்தை மாற்றி லக்னோவில் படம் பிடிக்க இருக்கிறது. இன்னும் சில தினங்களில் லக்னோ புறப்படும் படக்குழு, இம்மாத இறுதியில் தான் சென்னை திரும்புகிறது.
ஆந்தாலஜி படங்கள் தலையெழுத்தை மாற்றுவாரா மணிரத்னம்
கொரோனா முதல் அலை தாக்கத்தின் போது ஒரு பக்கம் சில புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின. அவற்றோடு சில முக்கிய சினிமா பிரபலங்களைத் தேடிப் பிடித்து சில ஓடிடி தளங்கள் ஆந்தாலஜி வகைப் படங்களை எடுக்க வைத்தன. அந்த விதத்தில் கடந்த வருடத்தில் ஓடிடி தளங்களில் புத்தம் புது காலை, பாவக் கதைகள் ஆகிய இரண்டு ஆந்தாலஜி படங்கள் வெளிவந்தன. இரண்டுமே ரசிகர்களின் பொறுமையை நிறையவே சோதித்தன.
5 கதைகள் கொண்ட புத்தம் புது காலை ஆந்தாலஜி படத்தை சுதா கோங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் இயக்கினார்கள். 4 கதைகள் பாவக் கதைகள் ஆந்தாலஜி படத்தை சுதா கோங்கரா, விக்னேஷ் சிவன், கவுதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கினார்கள். இரண்டிலுமே தமிழ் சினிமாவில் உள்ள சில முக்கிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்தார்கள்.
ஓடிடி தளங்களுக்கு சந்தாதாரராக இருக்கும் பலரும் இவற்றைப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். சிலர் பார்க்க ஆரம்பித்து பாதியில் நிறுத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது. அந்த அளவிற்கு விறுவிறுப்பில்லாத, அவார்டுகளுக்காக உருவாக்கப்படும் சில சினிமாப் படங்களைப் போல அவை இருந்தன. அதனால், ஆந்தாலஜி படம் என்றாலே ஓடிடி சந்தாதாரர்கள் தொலை தூரம் ஓடும் சூழல் ஏற்பட்டது.
ஓடிடி தளத்தில் அடுத்த ஆந்தாலஜி வெளியீடாக மணிரத்னம், ஜெயேந்திரா தயாரித்துள்ள நவரசா நாளை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை பிரியதர்ஷன், வசந்த், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்பராஜ், சர்ஜுன் கேஎம், கார்த்திக் நரேன், அரவிந்த்சாமி, ரதீந்திரன் ஆர் பிரசாத் ஆகியோர் இயக்கியுள்ளார்கள். இதிலும் சில முன்னணி முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
நவரசா டிரைலரைப் பார்த்த போது முந்தைய ஆந்தாலஜி படங்களைப் போல இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அதையும் மீறி நவரசா படத்திற்கு புதிய ரசனையை மணிரத்னம் அன்ட் கோ சேர்த்திருப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. அது நாளை இந்நேரம் தெரிந்துவிடும்.

