திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அரிசி மற்றும் நிவாரண பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் இயக்குனர் சங்கம் திருப்பத்தூர் கல்வி மாவட்டம் சார்பில், இந்த கல்வி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் சுமார் 11 நபர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான ரூ.3000 மதிப்புள்ள 25 கிலோ அரிசி மூட்டை மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு, பள்ளி திறந்தால் மட்டுமே உரிய சம்பளம் கிடைக்கும். அதுவரை முடிந்த உதவிகளை செய்வோமே என திருப்பத்தூர் கல்வி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் இயக்குநர் சங்கத்தினர் இந்த நிவாரண பொருட்களை வழங்கினர்.
இச்சங்கத்தின் தலைவர் இன்பராஜ் பொன்னுத்துரை தலைமையில், செயலர் முருகேசன், பொருளாளர் சிவக்குமார் முன்னிலையில் சிவகங்கை மாவட்ட கைபந்து கழக செயலாளர் திருமாறன் நிவாரண பொருட்களை வழங்கினார்.