• Fri. Apr 18th, 2025

கும்பகோணம் அருகே மர்ம நபர்கள் கொளுத்திய குப்பையில் இருந்து தீப்பொறி பரவி 10க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகின….

Byadmin

Jul 29, 2021

கும்பகோணம் அருகே சாக்கோட்டை முகுந்தநல்லூர் கோட்டை சிவன் கோவில் தெருவில் 30க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் பத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.

இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து கும்பகோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்த குடிசை வீடுகள்மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாதவாறு சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில் குடிசை வீடுகளில் இருந்த சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. மேலும் வீடுகளில் இருந்த பணம், நகை, அடையாள அட்டை, சான்றிதழ்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து கும்பகோணம் டிஎஸ்பி பாலாகிருஷ்ணன், நாச்சியார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் குடிசை வீடுகளுக்கு அருகே மர்ம கொளுத்திய குப்பையிலிருந்து தீப்பொறி காற்றில் பரவி குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுமார் பத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.