

கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு சமத்துவபுரத்தில் வீடு வழங்க வேண்டும்.., எழுத்தாளர் பாமரன் முதல்வருக்கு கோரிக்கை..! எழுத்தாளர் பாமரன் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கலப்புத்திருமணம் செய்த தம்பதியினருக்கு சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு செய்வதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,
அன்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு
.
சாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்தினை உருவாக்கும் நோக்கத்தோடு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட பெரியார் நினைவு சமத்துவ புரங்களை மேம்படுத்தவும் மேலும் விரிவுபடுத்தவும் தாங்கள் அறிவித்துள்ளது கண்டு மிக மகிழ்கிறோம்.
.
இவ்வேளையில் ஓரிரு கருத்துக்களை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டே இம்மடல்.
.
சமத்துவபுரங்களில் 40 விழுக்காடு அட்டவணை சாதியினர், 25 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 25 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், 10 விழுக்காடு மற்ற பிரிவினர் என மனைகள் ஒதுக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
.
சகல பிரிவினரும் கலந்து வாழுகின்ற சமத்துவச் சூழல்தான் இத்திட்டத்தின் நோக்கம் என்பது தாங்கள் அறியாததல்ல.
.
இருப்பினும் இதனை இன்னும் செழுமைப்படுத்திடும் பொருட்டு ”சாதி மறுப்பு திருமணம் புரிந்தோரே சமத்துவபுரத்தில் குடியேற முக்கியத் தகுதியுடைவர்கள்” என்கிற அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டால் அதுவோர் அர்த்தம் பொதிந்த திட்டமாக இருக்கும் என்பது எனது பணிவான கருத்து.
.
இதுவரையில் செயல்பாட்டில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் முன்னர் கூறிய ஒதுக்கீட்டின்படி தொடரட்டும்.
ஆனால் புதிதாக தங்களால் திறக்கப்பட உள்ள சமத்துவபுரங்கள் சாதி மறுப்பு – மத மறுப்பு தம்பதியினருக்கே உரித்தான தனித்துவமான பெரியார் நினைவு சமத்துவபுரங்களாக ஒளிவீச வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
.
பெரும்பாலும் இத்தகைய கலப்பு மணம் புரிந்தோர்களது வசிப்பிடங்களாக கிராமங்களைக் காட்டிலும் நகரங்களும் பெருநகரங்களுமே விளங்குவதால் இப்புதிய சமத்துவபுரங்களில் ஒதுக்கீடு செய்யும்போது முன்னர் போலன்றி கிராமம், ஊராட்சி, சிற்றூர் என்பனவற்றோடு நின்றுவிடாமல் நகராட்சிகள் மாநகராட்சிகள் போன்றவற்றில் வாழ்வோரையும் இணைத்துக் கொண்டால் அது எண்ணற்ற சாதி மறுப்பு இல்லத்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
.
தொடர்ச்சியாக நமது தமிழ் நாட்டு அரசுகள் ஏற்கெனவே ஓட்டு வீடுகளில் வசிப்போரை காங்கிரீட் கூரை கொண்ட வீடுகளில் குடியமர்த்தி வரும் வேளையில்… ”காங்கிரீட் கூரை வீட்டில் வாடகைக்கு வசிப்போருக்கும் சமத்துவபுரங்களில் இடமுண்டு” என இத்திட்டத்தினை நீட்டித்து உதவ வேண்டும்.
.
”பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் வாழ்வோர் சமத்துவத்தை போற்றக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாய் இருத்தல் அவசியம்” என்கிற அர்த்தம் பொதிந்த வழிகாட்டும் நெறிகளுக்கு உதாரணங்களாக முந்தைய சமத்துவபுரங்கள் மேம்பாடு அடையும் அதேவேளையில்…
.
ஏற்கெனவே சமத்துவத்தின் நோக்கத்தினை உணர்ந்து அதனை தங்களது சொந்த வாழ்விலும் நிரூபித்துக் காட்டிய சாதி மறுப்பு தம்பதிகள் மட்டுமே வாழும் ”சாதியற்றோர் சிறப்பு மண்டலங்கள்” ஆக தங்களால் திறந்து வைக்கப்படும் இப்புதிய சமத்துவபுரங்கள் மிளிரட்டும் (Casteless Special Zone).
.
”இங்கு குடியேற நமக்கும் இடம் கிடைக்குமா?” என மற்றவர்களும் ஏங்கும் வண்ணம் தமிழ்நாடு தேர்வாணையப் பணிகளுக்கான பயிற்சி மையங்கள், இந்திய குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் என எண்ணற்ற அதிநவீன வசதிகளுடன் இப்புதிய சமத்துவபுரங்கள் அமைந்தால் தங்களுக்கு தமிழ் நாட்டினது மக்கள் என்றென்றும் நன்றி கூறுவர்.
.
”சாதி சமயமற்ற பரந்த உள்ளத்திற்கு நம்மை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற உளப்பூர்வமான எண்ணமும் செயலும் இருந்தால் நமக்கும் அங்கே உண்டு இடம்” என்கிற உந்துதலை ஏனையோர் பெறுகின்ற வண்ணம் ஒளிபொருந்திய சிறப்பு மண்டலங்களாக திகழட்டும் அவை.
.
தங்களால் மேலும் மேலும் செழுமைப்படுத்தப்படும் இத்திட்டம் அண்டை மாநிலங்களுக்கு மட்டுமின்றி இந்திய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து மாநிலங்களுக்குமே ஒரு வழிகாட்டும் கலங்கரை விளக்காக நிச்சயம் அமையும். இவ்வாறு அதில் விளக்கமாக கூறியுள்ளார்.

