ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 8 நாட்களுக்கு பூஜைகள் நடைபெற இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் இல்லாமல் தீபாராதனைகள் மற்றும் ஹரிவராசனம் பாடப்பட்டது. இதையடுத்து அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் போன்றவை நடைபெற்றன.
ஆவணி மாத பூஜையை ஒட்டி வருகிற 21ஆம் தேதி ஓணம் பண்டிகை வருவதால் 23ஆம் தேதி வரை தொடர்ச்சியாக சபரிமலையில் பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 15,000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.