90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஆனந்தக் கண்ணன். சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான ஆர்.ஜே.வாகப் பணியாற்றி, பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நகைச்சுவையான பேச்சுக்கும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாணியும் ஆனந்த கண்ணனுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி கொடுத்தது. நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த ஆனந்த கண்ணன் சன் டிவியில் ஒளிபரப்பான ‘சிந்துபாத்’, ‘விக்ரமாதித்யன்’ உள்ளிட்ட தொடர்கள் மூலமாக நடிகரானார், சில தமிழ் படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே திரையுலகிலும், சின்னத்திரையிலும் ஆனந்த கண்ணன் தலைகாட்டாமல் இருந்து வந்தார். இந்நிலையில் ஆனந்த் கண்ணன் மரணமடைந்தார் என்ற செய்தி ரசிகர்களுக்கு அதிகாலையிலேயே இடியாய் இறங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகப் அரிதான புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஆனந்தக் கண்ணன் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.