

கீழடி: அகரம் அகழாய்வில் கிடைத்த கொண்டையுடன் கூடிய அழகிய பெண் உருவம் – அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
கீழடி அருகே உள்ள அகரம் அகழாய்வில் கொண்டையுடன் கூடிய அழகிய பெண் உருவம் கொண்ட மண்ணால் ஆன சுதைச் சிற்பம் கிடைத்துள்ளது. ‘இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ள தமிழ்ப் பொண்ணு’ என அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டரில் பெருமிதம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா வில் கீழடி அருகே அகரத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அழகிய கொண்ட யுடன் கூடிய பெண் உருவம் போன்ற தொற்றம் படைத்த மண்ணாலான சுதைச் சிற்பம் ஒன்று இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கீழடி அகழாய்வு இணை இயக்குனர் பாஸ்கரன் கூறுகையில், மிகப்பழமை வாய்ந்த மண்ணாலான பாவையின் சிற்பம். கீழடியில் மிக குறிப்பிடத்தகுந்த கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாக அமையும். நமது சங்க இலக்கியங்களில் பெண்களின் சிகை அலங்காரம் குறித்து பல்வேறு புலவர்களால் பாடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தப் பாவையின் சிகை அலங்காரம் அழகு வாய்ந்தது சிறப்பு வாய்ந்ததும் கூட என்கிறார்.
இந்த சிற்பம் குறித்து தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டுவிட்டர் செய்தியில், ‘தமிழ்ப் பொண்ணு… இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ள தமிழ்ப் பொண்ணு… இந்த ஹேர் ஸ்டைல் எல்லாம் அந்த காலத்திலேயே அத்துபடி…’ என பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் மதுரையைச் சேர்ந்த சுதர்சன் பாஸ்கர் கூறுகையில், கீழடியில் கிடைத்திருக்கும் சிறிய உருவம் பெண்ணுக்கானது என அமைச்சர் பதிவிட்டிருக்கிறார்.
பெரும்பாலும் சரியாகவும் இருக்கலாம்.
ஆயினும் ராஜராஜ சோழன் ஓவியத்தில் பக்கவாட்டு கொண்டை அவருக்கும் இருப்பதால் ஆணாக இருக்கும் வாய்ப்பும் உண்டு. அதுபோக சிற்பத்தில் இருபக்கமும் குண்டலம் தெளிவாக இருக்கிறது. அதுபோக காது நீண்டிருக்கிறது. உலகம் முழுக்க பழங்குடிகளாக மக்கள் வாழ்ந்த காலம்தொட்டு நீண்ட காதுகளுடன் அணிகலன்கள் அணிந்து வந்தமை பொதுவான விசயம் என்றாலும், கிராமத்தில் காது நீண்டிருந்தாலே பௌத்த ஜைன எச்சம் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் அதற்கு அதை முடிவுகட்டும் விதமாக கிமு580 என இப்போதைக்கு காலக்கணக்கீடு செய்யப்பட்ட கீழடி காலத்தில் ஆபரணங்களுடன் இப்படியான ஒரு சிறிய சிற்பம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
