ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோவை திருடி விபத்தில் சிக்கிய வாலிபர் பிடிபட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தைலாகுளத்தில் வசிப்பவர் காளிராஜன் வயது 34. ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று சவாரிக்காக தனது ஆட்டோவை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் நள்ளிரவு 1:30 மணிக்கு நிறுத்திவிட்டு, கொல்லம் ரயிலை எதிர்பார்த்து காத்திருந்தார். அப்பொழுது அவருக்கு தூக்கம் வரவே ஆட்டோவின் சாவியை அதிலே வைத்துவிட்டு ரயில் நிலையத்தில் உள்ள பெஞ்சில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது இதனை பயன்படுத்திக் கொண்ட ராஜபாளையம் சுரக்காய் பட்டியை சேர்ந்த குருசாமி மகன் புதியராஜ் வயது 19 என்ற வாலிபர் காளிராஜன் ரயில் நிலையம் முன்பு நிறுத்தி இருந்த ஆட்டோ எடுத்துக் கொண்டு ராஜபாளையம் நோக்கி வேகமாக சென்றுள்ளார். அப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சாலை மடவார் வளாகம் வளைவு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் ஆட்டோவை காணாததால், காளிராஜனும் அவருடன் இருந்த சக ஆட்டோ டிரைவர்களும், ஆட்டோவை தேடி பார்க்கும்போது, ஆட்டோ விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று ஆட்டோவை கைப்பற்றி புதியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.