• Thu. Apr 25th, 2024

மூத்த இயக்குநர்களை இளையவர்கள் மதிப்பதில்லை! – பிரபல இயக்குநர் குற்றச்சாட்டு

ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது.

கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு இன்று காலையில் சென்னை, வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது. கூகுள் குட்டப்பா’ படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு ஆகியோர் வெளியிட, படத்தில் முக்கிய வேடத்தில் இடம் பெற்றிருக்கும் ரோபோ மேடையில் தோன்றி பெற்றுக் கொண்டது.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், ”1980-களில் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் இது போன்ற ரோபோட்டை மையப்படுத்தி திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறார். எனக்கும் இது போல ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மலையாளத்தில் வெளியான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தை பார்த்தேன். அந்தப் படம் தமிழில் வெளியானால் மிகப் பெரும் வெற்றி பெறும் என்று அப்போதே உறுதியாக கூறினேன்.

மனிதத்திற்கும், இயந்திரத்திற்கும் இடையேயான உணர்வுபூர்வமான பரிமாற்றத்தை விளக்கும் படைப்பாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. தற்போதைய நிலையில் சக மனிதர்களிடத்தில் காண்பிக்காத அன்பை, ஒரு இயந்திரம் காண்பிக்கிறது என்றால் அது நிச்சயமாக வெற்றியைப் பெறும். குழந்தைகள் முதல் அனைவரும் ரசிக்கும் வகையில் ‘கூகுள் குட்டப்பா’ உருவாகி இருப்பதால் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இன்று வரை அவருடைய குருநாதரான விக்கிரமனுக்கு உரிய மரியாதையை அளித்து வருகிறார். அவரும், அவருடைய சீடர்களும் இன்றளவிலும் குருவிற்கு அளித்து வரும் மரியாதை, அவர்களுக்கு வெற்றியை தேடித் தரும். ஆனால் இன்றைய சூழலில் இளம் இயக்குநர்கள் யாரும் மூத்த இயக்குநர்களுக்கு மரியாதை அளிப்பதில்லை.

அண்மையில் ஒரு இளம் இயக்குநரின் படைப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை பார்வையிட்டு, படம் நிறைவடைந்த பின் அந்த இளம் இயக்குநருக்காக காத்திருந்து, அவரிடம் பாராட்டை தெரிவித்தபோது, அவர் மிக எளிதாக ஒரே வார்த்தையில் பதிலளித்து கடந்து சென்றுவிட்டார்.

இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். நீங்கள் படங்களைத் தயாரிக்க வேண்டுமென்றால், எங்கள் சங்கத்தை அணுகி புதிய கதைகளை கேளுங்கள். அதில் உங்களுக்கு பிடித்த கதையை படமாக தயாரிக்கலாம். திறமைவாய்ந்த இளம் இயக்குநர்கள் எங்களது சங்கத்தில் தயாராக இருக்கிறார்கள். அவர்களை தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *