• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்த ஆட்சிக்கு நீங்கள் தான் பக்க பலமாக இருக்க வேண்டும்… ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் மேட்டுக்கடையில் உள்ள தங்கம் மகாலில் நடைபெற்ற கழக ஈரோடு மாவட்ட திமுக துணை செயலாளர் ஆ. செந்தில்குமார் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி சிறப்பு உரையாற்றினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது

நாளை நடக்கவுள்ள பிரதமர் பங்கேற்கும் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வேண்டியிருப்பதால், இன்றைய தினமே, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். திமுக இளைஞரணி வள்ர்ச்சிக்காக நான் சுற்றுப்பயணம் செய்தபோது, ஈரோடு அமைப்பாளராக இருந்த எவரெஸ்ட் கணேசன், நான் கொங்கு மாவட்டங்களுக்கு வரும்போதெல்லாம் என்னை வரவேற்று, எனக்கு துணையாக இருந்தவர். அவரது தம்பிகளில் ஒருவராக செயல்பட்ட செந்தில்குமார், முரண்டு பிடிக்கும் சுபாவம் கொண்டவர். விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், தான் நினைத்ததைச் செய்ய வேண்டும் என நினைப்பவர். இந்த நிகழ்ச்ச்சிக்கு ஒப்புக்காகத்தான் என்னை தேதி கேட்டார். அவர் கட்டாயப்படுத்தாவிட்டாலும், மழை, எனது உடல்நிலை பாதிப்பு குறித்து கவலைப்படாமல் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளேன்.
வந்ததற்கு பலனாக கட்சிக்கு ஐந்து லட்சம் நிதியாக கிடைத்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முதல் முதலாக தேர்தல் நிதியை வழங்கியுள்ளார். அவர் கைராசிப்படி, நாளையில் இருந்து தேர்தல் நிதி குவியப்போகிறது.
திமுக ஆட்சி அமைந்தபோது, கரோனா என்ற கொடிய நோய் பாதிப்பைச் சந்தித்தோம். அதில் இருந்து மீண்டபோது, தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் தொடர் மழை பெய்தது. நான் 96-ம் ஆண்டு சென்னை மேயராக பொறுப்பேற்றதற்கு அடுத்த நாள் முதல் சென்னயில் 10 நாட்கள் தொடர் மழை பெய்தது. அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி, மழை பாதிப்பை பார்வையிட்டபோது, ‘சென்னையில் ஸ்டாலின் மேயரானது முதல் மழை பேயராகவே இருக்கிறது’ என்று சொன்னார். அதுபோல், தற்போதும் மழை தொடர்ந்து பெய்கிறது. நம்ம அதிஷ்டத்தால் குடிநீர் பஞ்சமே இருக்காது. இது நம்ம ராசி ராசி. வாக்களித்த உங்கள் ராசி.
இந்த சூழலில் செந்தில்குமாரின் அண்ணன் மகனுக்கு திருமணம் நடக்கிறது. செந்திலின் தந்தை 1977-ல் திமுக வார்டு செயலாளராக பணிபுரிந்து வருகிறார். அதன்பின் செந்தில் 1980-81ல் இளைஞரணி உறுப்பினராகச் சேர்ந்து, வார்டு செயலாளர், மாணவரணி, மாவட்ட பொருளாளர் பதவிகளை வகித்து தற்போது மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். நாளைக்கு இதவிட பெரிய பொறுப்புகள் அவருக்கு வரும். வர வேண்டும். படிப்படியாக வளர்ந்து சிறந்த செயல்வீரராக அவர் விளங்குகிறார்.
கருணாநிதியின் குருகுலமாக விளங்கும் ஈரோட்டில் அவருக்கு மூன்று இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இது பெரியார் மண் என்பதால் 300 சிலைகள் கூட விரைவில் வைக்கலாம்.
முன்பெல்லாம், சீர்திருத்த திருமணம், சுயமரியாதை உணர்வோடு நடந்தால், அதனை கேலி, கிண்டல் செய்து கொச்சைப்படுத்தியது உண்டு. ஆனால், இன்றைக்கு சீர்திருத்தத் திருமணம் இல்லை என்றால்தான் ஆச்சர்யமளிக்கிறது. 1967-ல் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றபோது, சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று உத்தரவிட்டதுதான் அதற்கு காரணம். அதன்பிறகு இன்று பல இடங்களில் சீர்திருத்த திருமணம் நடப்பது, பரவியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்வதால், விவசாயிகளுக்கு பாதிப்பில்லை. குடிநீர் பஞ்சமில்லாத சுபிட்சமான நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இந்த நிலையில், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும், சொல்லாத வாக்குறுதிகளையும் நாம் நிறைவேற்றி வருகிறோம். இந்த ஆட்சிக்கு பக்கபலமாக நீங்கள் இருக்க வேண்டும் என்றார்.