உலக அரங்கில் கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச யோகா தினம் பத்து ஆண்டுகளை நிறைவு செய்து 11-வது ஆண்டில் உலகின் மிகப்பெரிய யோகா நிகழ்வாக ஐந்து இலட்சத்திற்கும் கூடுதலான இடங்களில் யோகா சங்கமம் என்ற பெருந்திரள் யோகா செயல் விளக்க நிகழ்ச்சி,தேசிய அளவில் சிறப்பாக கொண்டாடுவதற்கு மத்திய அரசு, ஆயுஷ் அமைச்சகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு, நல்வாழ்வு, கலாச்சார பாரம்பரியம், விழிப்புணர்வு மற்றும் அணுகுமுறை போன்ற குறிக்கோள்களை அடிப்படையாக கொண்டு இவ்விழா கொண்டாடப்படுகிறது.

புதுச்சேரி அரசின் சார்பில், சுற்றுலாத்துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை, ஆயுஷ் இயக்குநரகம் மற்றும் புதுச்சேரி மாசுக் கட்டுபாட்டுக் குழுமம் ஆகிய துறைகள் இணைந்து 11-வது சர்வதேச யோகா தின விழா புதுச்சேரி கடற்கரைச் சாலையில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர்களாக துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் விழாவைத் தொடங்கி வைத்தனர். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம். அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுத்துறை உயர் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் துறைத் சார்ந்த தலைவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி..
மனம் அமைதியாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும், மனதை ஒருநிலைப்படுத்தி செயல்படுத்துவதற்கு யோகா பங்கு வகிக்கிறது. யோகாவை கற்றுக் கொண்டிருப்பவர்கள், அதனை செய்து கொண்டிருப்பவர்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதை நாம் பார்க்க முடியும், வயது முதிர்வு அறிய முடியாத நிலையில் உடல் ஆரோக்கியமாக இருக்கும், நோயற்ற வாழ்வு மிக அவசியமான ஒன்று, அதற்கு யோக மிகவும் அவசியம், யோகாவை ஒரு கலையாக வளர்த்து ஆரோக்யமாக வாழ்வோம் என பேசினார்…
மேடைப்பேச்சு…ரங்கசாமி முதலமைச்சர்…
நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக யோகா வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற “பெருந்திரள் யோகா செயல் விளக்க நிகழ்ச்சி” நடத்தப்பட்டது. இதில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், யோகா பயிற்சியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.முன்னதாக விசாகப்பட்டினத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற சர்வதேச யோகா தின விழா நிகழ்வுகள் கடற்கரைச் சாலையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த திரைகளின் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.