• Sun. Apr 28th, 2024

உலக சிவனடியார்கள் திருக்கூட்டம்…, சைவ பெருவிழா மற்றும் சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி…

ByKalamegam Viswanathan

Jun 26, 2023

ராஜபாளையத்தில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அமைப்பு சார்பில் சைவ பெருவிழா மற்றும் சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டு அனைவருக்கும் அடையாள அட்டைகளை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

இந்து சமய அறநிலைய துறை சார்பில் கோயில் பராமரிப்பு, திருப்பணி மற்றும் ஊழியர்களின் சம்பளம் என்ற பெயரில் ஆண்டுக்கு ₹. 340 கோடி செலவு கணக்கு காட்டப்படுகிறது. இந்தத் தொகை பொது மக்களின் வரிப்பணத்தில் இருந்து எடுக்கப்படுவது கிடையாது. பண்டைய கால மன்னர்களாலும், சிவ தொண்டர்களாலும் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மற்றும் வாடகை நிலம் உள்ளது. இதிலிருந்து வரும் வருமானத்தையே மாதம் ₹. 28 கோடி என்ற கணக்கில் வருடத்திற்கு 340 கோடி ரூபாய் செலவு கணக்கு காட்டப்படுகிறது.

இவ்வளவு தொகை எடுக்கப்பட்டும் அவிநாசி கோயிலின் மின் கட்டணம் செலுத்தப்படவில்லை. மற்ற மத வழிபாட்டு தலங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ₹. 2 க்கும் குறைவாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இந்து கோயில்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 7.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது உச்சகட்ட அநியாயம். எதற்கு இந்த பாகுபாடு காட்டப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் 3.50 லட்சம் சிலைகள் சட்டப்படி இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளது. 1972ல் இயற்றப்பட்ட மத்திய அரசின் சட்டப்படி கோயில் சிலைகளில் தொன்மை நிர்ணயிக்கப்பட வேண்டும். மூன்றரை லட்சம் சிலைகளுக்கும் தொன்மை நிர்ணயிக்கப்படவில்லை என்ற நிலையில் பதிவு செய்யப்படாமல் உள்ளது. சட்டம் இயற்றப்பட்டு சுமார் 50 ஆண்டுகாலம் ஆகியும், இதுவரை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு உரிய பணியை முறையாக செய்யவில்லை.

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தெய்வ விக்கிரகங்கள் முழுமையாக மீட்கப்படவில்லை. பத்தில் ஒரு சதவீதம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

பல நூற்றுக்கணக்கான கோயில்கள் நலிவடைந்து உடனடியாக மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. நூற்றுக்கணக்கான கோயில்கள் பராமரிப்பு செய்யாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவற்றை காப்பாற்றுவதற்காக சிவனடியார்களை ஒரே கொடையின் கீழ் கொண்டு வருவதற்காக முயற்சி செய்து வருகிறோம்.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோயிலில் அமைந்துள்ள கோமதி அம்மன் உடனுறை சங்கரலிங்கனார் கோயில் திருப்பணியின் போது பாண்டிய மன்னர் 11 கிலோ எடை கொண்ட வெள்ளி பல்லக்கு அர்ப்பணித்துள்ளார். இந்தப் பல்லக்கு சுத்தம் செய்யப் படுவதாக தனிமைப் படுத்தப்பட்டு சிறிது சிறிதாக மொத்தமும் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை காவல்துறை ஏற்காமல் தாமதம் செய்து வந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் நான் பணியாற்றிய போது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளையும் கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன். ஆனால் இந்த வழக்கு குறித்து, இதுவரை நடைபெற்ற விசாரணை உள்ளிட்ட எந்த தகவலும் எனக்கு அளிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *