• Thu. Apr 25th, 2024

அகில உலக மீனவர் தின விழா – பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் கழகம்

அகில உலக மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை அகில உலக மீனவர் தினம் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை கோட்டாறு மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் அருள்பணியாளர் டென்ஸ்டன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாளை நடைபெற உள்ள அகில உலக மீனவர் தினம் நாளில் மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு சில கோரிக்கைகளை நாங்கள் முன் வைத்திருக்கிறோம். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும், இந்திய தேசிய கடல் மசோதாவை ரத்து செய்ய வேண்டும், மூன்று வேளாண்மை சட்டங்களை ரத்து செய்தது போல தேசிய மீனவர் மசோதாவையும் ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும், மீனவர்களுக்கு வரியில்லா டீசல் வழங்க வேண்டும், ஆழ்கடலில் மீன் பிடி தொழில் செய்யும் போது பல்வேறு இடையூறுகள் ஆபத்துகளில் சிக்கித் தவிக்கும் மீனவர்களுக்கு சர்வதேச அளவில் அவர்களுக்கு உதவிகள் பெறுவதற்கு வசதியாக தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும், அந்த அடையாள அட்டை மூலம் சர்வதேச கடல் பகுதிகளில் அவன் ஒரு இந்திய குடிமகன் என்ற உரிமையைப் பெற முடியும், காணாமல் போன மீனவர்களை தேடி கண்டுபிடிக்க கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ள கடல் ஆம்புலன்ஸ் போன்ற வசதியை தமிழக அரசும் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தில் செய்ய முன்வரவேண்டும், அதேபோன்று எல்லை தாண்டி சென்றதாக வெளிநாடு சென்று மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் பல்வேறு சிக்கல்களில் உட்படுகிறார்கள் அவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கினால் இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து காப்பாற்ற முடியும்.

இந்த அகில உலக மீனவர் நாளில் மத்திய மாநில அரசுகளுக்கு வைக்கின்ற முக்கியமான கோரிக்கை ஒன்றுபட்ட மீனவ சமுதாயத்தை உருவாக்குவதில் அரசியலில் மீனவர்களுக்கு என்று தலைமைப் பண்பு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை நடைபெறும் அகில உலக மீனவர் தின விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், இதில் சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர் பங்கேற்புதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *