தேனி மாவட்டத்தில் உள்ள மூன்று கண்மாய்களில் மீன் பிடிப்பதற்கான குத்தகை ஏலம் வைகை அணை மீன் வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இணை இயக்குனர் பிரபாவதி, உதவி இயக்குனர் பஞ்ச ராஜா முன்னிலையில் இந்த குத்தகை ஏலம் நடைபெற்றது .
கூடலூரில் உள்ள மைதிலி மண்ணாடி குளம் கண்மாய் ரூபாய் மூன்று லட்சத்து 18 ஆயிரத்து 715, பெரியகுளம் தாமரை குளம் கண்மாய் ரூபாய் 6 லட்சத்து 36 ஆயிரம், சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய் ரூபாய் 2 லட்சத்து 22 ஆயிரம் என அரசின் குறைந்தபட்ச ஏலத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் சில்வார்பட்டி சிறு குளம் கண்மாய் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. கூடலூர் மன்னாடி குளம் கண்மாய் ரூபாய் 4 லட்சத்து 50ஆயிரத்திற்கும், பெரியகுளம் தாமரைகுளம் கண்மாய் ரூபாய் 20 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
தாமரை குளம் கண்மாய் ஏலம் எடுத்தவர் பணம் கட்ட வருவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே ஏலத்தை தனக்கு வழங்க இரண்டாவதாக கேட்ட சேதுராமன் மற்றும் சிலர் பிரச்சினை செய்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் சமரசம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஏலம் எடுத்த முத்து பாண்டி என்பவர் அலுவலக நேரத்திற்குள் வந்து பணத்தை செலுத்தியதால் பிரச்சனை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.