
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து(வயது 40). இவர் நெல்லையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக தினமும் தூத்துக்குடியில் இருந்து காலை பஸ்சில் வந்து பாளை பஸ் நிலையத்தில் இறங்குவது வழக்கம்.

அதேபோல் இன்று காலையில் பாளை பஸ் நிலையத்திற்கு வந்திறங்கிய அவர், டீ குடித்துவிட்டு பஸ் நிலையத்திற்குள் பஸ் உள்ளே செல்லும் பகுதியில் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக டவுனில் இருந்து பாளை பஸ் நிலையத்திற்குள் வந்த தனியார் பஸ் ஒன்று இசக்கிமுத்துவை இடித்து தள்ளியது.
பஸ் அதிக வேகத்தில் வந்ததால் இடித்து தள்ளியதில் கீழே விழுந்த இசக்கிமுத்து மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சின் பின்பக்க டயர் ஏறியது. எனினும் தொடர்ந்து பஸ் நிற்காமல் அவரை டயருடன் சேர்த்து சில அடி தூரம் நகர்ந்தது. உடனே அங்கு நின்றுகொண்டிருந்த பயணிகள் கூச்சலிடவே பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.
இதில் டயருக்கு அடியில் சிக்கிய நிலையில் இசக்கிமுத்து உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அங்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
