• Sun. Apr 28th, 2024

மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படும் – கனிமொழி எம்.பி பேச்சு

Byவிஷா

Feb 26, 2024

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழக அரசு வழங்கி வரும் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக கனிமொழி எம்.பி. பேசியிருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மகளிரணி-மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து மகளிரணி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நிர்வாகிகளுக்கு திமுக கட்சி வண்ணம் கொண்ட சேலைகளை வழங்கிய பின்னர் கனிமொழி எம்.பி.பேசியபோது தெரிவித்ததாவது..,
“ஒன்றிய அரசு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கை சட்டத்தில் அனைத்து கல்லூரி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு என்ற நிலையை உருவாக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தால் நமது பிள்ளைகள் எந்த கல்லூரிக்கும் போக முடியாத நிலை ஏற்படும். வரும் தேர்தல் என்பது பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய தேர்தல்.
மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. மழை, வெள்ளம் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிவாரண வழங்கவில்லை. தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்கக்கூடிய ஜிஎஸ்டி வரிப்பாக்கி என்பது 20 ஆயிரம் கோடி உள்ளது. பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வரும் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படும்.
மகளிர் உரிமைத்தொகையை கூட கொடுக்க முடியாத நிலை வந்துவிடும் என்று நம்முடைய முதலமைச்சரே சொல்லக்கூடிய அளவிற்குத் தொடர்ந்து தமிழகத்திற்குப் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றனர். வெள்ள பாதிப்புக்கு நிதி கேட்டாலும் பணம் தருவதில்லை. வரவேண்டிய வரி நிலுவைத் தொகையும் தருவதில்லை. தமிழக அரசின் எந்தத் திட்டத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நிதி கொடுப்பதில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *