

சிக்னல் கோளாறு காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகளை அவதிக்கு உள்ளாக்கியிருப்பதுடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மேல்பக்கம் ரயில் நிலையத்தில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம் காட்பாடி வழியாக மைசூர் செல்லும் சதாப்தி அதிவிரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அரை மணி நேரத்திற்கு பிறகு ரயில்கள் தாமதமாக ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டுச் சென்றன. சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து மைசூர் செல்லும் சதாப்தி விரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் கோவை அதிவிரைவு ரயில் மற்றும் அரக்கோணத்தில் இருந்து வேலூர் செல்லும் மெமோ பாசஞ்சர் ரயில் உட்பட பல ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. அடுத்தடுத்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

