• Fri. Apr 18th, 2025

இரு கைகளை இழந்த பெண் அறுவை சிகிச்சை வெற்றி!

BySeenu

Apr 13, 2025

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த ருக்மணி (வயது 32) என்பவர் உயர் மின்சாரம் தாக்கியதில் தனது இரு கைகளையும் இழந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை கைகள் பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

இரண்டு ஆண் குழந்தைகளின் தாயான ருக்மணி, கடந்த 2024 ஆம் ஆண்டு தனது வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகளை அழைப்பதற்காகச் சென்ற போது எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த மின்சாரம் தாக்கியதில் அவரது இரு கைகளும் செயலிழந்தன.

இதை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் ருக்மணி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அவருக்கு அதிநவீன ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ருக்மணி தனது அன்றாட பணிகளைச் சுயமாக மேற்கொள்ளவும், கைகளை பயன்படுத்தவும் ஏதுவாக யுனிவர்சல் கப் என்ற சுய உதவி சாதனம் மூலம் அவருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதன் விளைவாக, தற்போது ருக்மணி தனது பெயரை எழுதவும், தனது அன்றாட வேலைகளை பிறர் உதவியின்றி செய்யவும் உள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் சுமார் 200 பேருக்கு செயற்கை கைகள் மற்றும் கால்கள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.