வத்திராயிருப்பில் பெண் கழுத்து, காதை அறுத்து கொடூர கொலை செய்த கணவன் தலை மறைவு. போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் பெண் கழுத்து காதை தனித்தனியே அறுத்து கொடூரமாக கொலை செய்த கணவனை போலீசார் தனிப்பட அமைத்து அருகே உள்ள தோப்புகளில் தேடி வருகின்றனர்.
இங்குள்ள வெள்ளாளர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பாட்டையா (எ) மாரியப்பன் (58). கொத்தனார் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (55).
இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் ஒரு மகள் கணவனை பிரிந்து இவர்களோடு வாழ்ந்து வந்தார். இது தொடர்பாக மாரியப்பன், மனைவியுடன் அடிக்கடி தகராரில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பரமேஸ்வரி வீட்டிற்கு தற்செயலாக சென்ற பேரன், அவர் கழுத்து, காது வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததையடுத்து கூச்சலிட்டார். அருகில் வசிப்பவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
வத்திராயிருப்பு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து தனிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு, தலைமறைவாக உள்ள கணவனை தேடி ஊரை சுற்றியுள்ள வயல்வெளிகள் தோப்புகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மிக நெருக்கமான குடியிருப்பு பகுதியில் சிறிதும் சத்தமே இன்றி இக்கொலை நடந்தது. அப்பகுதியினர் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.