• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஜன.12ல் தமிழகம் வருகை தரும் மோடி.., முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா..? எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்..!

Byவிஷா

Dec 21, 2021

தமிழகம் வரும் பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு ஒன்றை நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். அதற்கான ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2022ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா நடைபெறவுள்ளது.


இதில் கலந்துகொண்டு கல்லூரிகளைத் திறந்துவைக்க பிரதமர் மோடி ஜனவரி 12ஆம் தேதி விமானம் மூலம் சென்னை வர உள்ளார். மேலும், விருதுநகரில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்த பின்னர் பிரதமர் மோடி முதன்முறையாக தமிழ்நாடு வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் முதன்முறையாக ஒரே மேடையை பகிர்ந்துகொள்கின்றனர். இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.


11 மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்துகொண்டன. இவை திறக்கப்பட்டால் சுமார் 1450 இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என கூறப்படுகிறது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் கொடுமையால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் இந்த ஸ்டாலின் மோடி பங்கேற்கும் நிகழ்வில் நீட் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக வாய்ப்புள்ளதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஒரு ஆண்டுக்கும் மேலாக டெல்லியில் போராடி வந்த விவசாயிகளுக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. போராட்டக் களத்திலேயே பலர் உயிர்விட்டனர். எதிர்ப்பு அதிகரித்து வந்ததாலும், பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒன்றிய அரசு அந்த சட்டத்தை ரத்து செய்தது.


அதுமட்டுமல்லாமல் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகளே உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக அணி திரண்டுவிடக்கூடாது என்பதிலும் பாஜக கவனமாக உள்ளது. இந்த சூழலில் சிலவற்றை விட்டு பிடிக்கலாம், மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் பாஜக தலைமை இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதன் ஒருகட்டமாக நீட் தேர்விலும் பாஜக அரசு சில தளர்வுகளை அறிவிக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டாலும் தமிழகத்துக்கு விலக்கு என்ற அளவில் அல்லது மாநில அரசு முடிவு செய்துகொள்ளலாம் என்ற அளவில் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி செய்தால் அதுவே உண்மையான பொங்கல் பரிசாக இருக்கும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.